700 ரூபா அடிப்படை வேதனத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், இன்று அலரிமாளிகையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்ப ஆகியன இணைந்து முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளன.
இந்தக் கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைய, அடிப்படை வேதனம் 700 ரூபாவுக்கு மேலதிகமாக, விலைக்கான கொடுப்பனவாக 50 ரூபாவையும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றை உள்ளடக்கி 105 ருபாவையும், மேலதிக கொளுந்து கிலோ ஒன்றுக்காக 40 ரூபாவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், இந்த கூட்டு ஒப்பதத்தை கைச்சாத்திடுவதிலிருந்து தாம் விலகுவதாக கூட்டு ஒப்பந்த்தில் கைச்சாத்திடும் ஒரு தொழிற்சங்கமான பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பான வரைவில், வரவுக்கான கொடுப்பனவு மற்றும் உற்பத்தி கொடுப்பனவு முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், அதன் பிரதிநிதி ஒருவரினால் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
700 ரூபா அடிப்படை வேதனத்துடன், கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
சிவில் அமைப்புகளின் ஒன்றியமான 1000 இயக்கம் என்பன இது தொடர்பான தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
700 ரூபா அடிப்படை வேதனத்துடன் முதலாளிமார் சம்மேளனமும், தொழிற்சங்கங்களும் இணைந்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு எதிராக இன்றைய கொழும்பிலும், மலையகத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் சந்தர்ப்பத்திலேயே, கூட்டு ஒப்பந்தம் பிரதமர் முன்னிலையில், அலரிமாளிகையில் கைச்சாத்தானது.