ஓகஸ்ட் 20 ஆம் திகதி செலுத்துவதற்கு உறுதியளிக்கப்பட்ட நிலுவைக் கொடுப்பனவை, ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தவும், முழுமையான நிலுவைக் கொடுப்பனவை டிசம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி முடிப்பதற்கும் லங்கெம் நிர்வாக தரப்பு எழுத்துமூலம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக லங்கெம் தலைமையகத்திற்கு முன்னால் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த எதிர்ப்பு போராட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதிவரை பிற்போடுவதற்கு சட்டரீதியான கொடுப்பனவு கிடைக்காதமையினால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர் என இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் சத்துர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேபலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கான எதிர்கால வைப்புநிதி என்பனவற்றை செலுத்துவதற்கு லங்கெம் நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இதன் காரணமாக லங்கெம் நிர்வாகத்தின்கீழ் முகாமைத்துவம் செய்யப்படும் அக்கரபத்தனை மற்றும் கொட்டகலை தோட்டங்களைச் சேர்ந்;த தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ள இந்தப் போராட்டத்திற்கு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் உட்பட சில சங்கங்கள் ஆதரவளித்துள்ளன.
இந்த நிலையில், சட்டரீதியான கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு லங்கெம் முகாமைத்துவத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னர், குறித்த எழுத்துமூல இணக்கப்பாட்டை ஏற்றுக்கொண்டு, எதிர்ப்பு நடவடிக்கை ஒக்டோபர் 20 வரை பிற்போடப்பட்டுள்ளது.
லங்கெம் நிர்வாக அதிகாரியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் சதுர சமரசிங்க, பிரதான செயலாளர் நாத் அமசிங்க உள்ளிட்ட சங்கத்தின் அதிகாரிகளும், அக்கரபத்தனை மற்றும் கொட்டகலை தோட்ட நிறுவனங்களின் அனைத்து பிரிவுகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
லங்கெம் நிர்வாகம் சார்பில், முகாமைத்துவ அதிகாரி சுனில் பொஹொலியத்த, வலய பணிப்பாளர் நிஸ்ஸங்க செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.