வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் விபரமறிய பணியகத்தை நாடுங்கள்

அமைச்சர் தலத்தா அத்துகோரள

தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள் நாடும் முகவர் மற்றும் வெளிநாட்டு வேலைத் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரித்து முழுமையான தகவல்களை பெற்றுகொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள கோரியுள்ளார்.

சரியான விபரங்கள் அறியாது வெளிநாடு செல்ல முனையும் ஆண்களும் பெண்களும் இடைத் தரகர்கள், போலியான, சட்டவிரோத முகவர் நிலையங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கும் பொருட்டே இக்கோரிக்கையை அமைச்சர் விடுத்துள்ளார்.

இவ்வாறான சட்ட விரோத முகவர் நிலையங்கள் மற்றும் இடைத்தரகர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில், தினமும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கின்றன. இவற்றில் நிதி மோசடி, சுற்றுலா வீசாவினூடாக தொழில்வாய்ப்பிற்கு அனுப்புகின்றமை, போலி வீசா தயாரித்தல், பயிற்சி மற்றும் குடும்ப விபரங்களை போலியாக தயாரித்தல், பிறருடைய கடவுச்சீட்டில் பயணித்தல் போன்றவை தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

இது தொடர்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையில் 56 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஆண்டு 252 முறைப்பாடுகள் தொழிலாளர்களினால் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தொழில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பானவை. அவற்றில் ஒப்பந்த மீறல்கள், ஒப்பந்தம் செய்யப்பட் சம்பளம் கிடைக்காமை, பணியாற்றும் வீடுகளில் சிறை வைக்கப்பட்டிருந்தமை, வீசா காலம் முடிந்த நிலையில் தொடர்ந்தும் பணியாற்றுகின்றமை என்பன உள்ளடங்குகின்றன. அவை தொடர்பில் விசாரணை செய்த போது அத்தொழிலாளர்களில் பலர் சட்ட விரோத முகவர்களை நம்பி வெளிநாடு சென்றவர்களாவர்.

அறியாமை, சரியான முறையில் தகவல் அறியாமை என்பன இவற்றுக்கு முக்கிய காரணமாகும். பணியகத்தின் சட்ட திட்டங்களை மதிக்காமல் விரும்பி இவ்வலையில் வீழ்ந்தவர்களும் இதில் உள்ளனர். மேலும் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் பணியகத்தின் சட்ட திட்டங்களை தவறாக அர்த்தம் கற்பித்தும் மக்களை ஏமாற்றுகின்றனர் என்பதை மறுக்க இயலாது. இதனால் அறியாத பாமர மக்கள் அவர்களிடம் ஏமாறுகின்றனர்.

வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லுமுன்னர் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு 0112251148 ,0112251367, 0112251386 ஆகிய உடனடி தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு 24 மணி நேரமும் தொழில், முகவர் நிலையம், அதன் பதிவு, சம்பளம் உட்பட தகவல்களையும் ஆவணங்கள் தொடர்பான விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்தோடு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பயிற்சி மிகவும் அவசியம். அதற்கமைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களுக்கு வீட்டுப் பணிப்பெண்களுக்கான 40 நாள் பயிற்சியும் 2 நாள் வெளிப்பயிற்சியும் வழங்கப்படுகின்றன. ஏனைய நாடுகளுக்கு செல்லும் பெண்களுக்கு 30 நாள் வீட்டுப் பணிப்பெண் மற்றும் பராமரிப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இஸ்ராயேல் போன்ற நாடுகளுக்கு பராமரிப்பு பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு 30 நாள் பயிற்சியும் தமிழ் சிங்கள மொழிப்பயிற்சி 18 நாட்களும் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி சான்றிதழ்கள் இல்லாமல் எவரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேசிய தொழிற்கல்வி பயிற்சி (NVQ Level III) பயிற்சியும் அவசியம். இது மத்திய கிழக்கு மற்றும் அல்லாத நாடுகளில் வீட்டுப்பணிப்பெண் மற்றும் பராமரிப்பாளர் பணிக்கு செல்லும் பெண்களுக்கே இச்சான்றிதல் அவசியமாகிறது. பணியக தரவுகளுக்கமைய 2015 ஜனவரி மாதம் தொடக்கம் 2016 மே மாதம் வரை 22246 தொழில் பயிற்சியை பெற்றுள்ளனர்.

நாடு பூராவும் பணியகத்தின் பயிற்சி மத்திய நிலையங்கள் 22 அமைக்கப்பட்டுள்ளன. இம்மத்திய நிலைய சான்றிதழ்கள் பல்வேறு சட்டவிரோத முகவர்களினூடாக தயாரிக்கப்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தொடர்ச்சியாக இது தொடர்பில் நாம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

விடய பொறுப்பு அமைச்சர் என்றவகையில் பயிற்சி தொடர்பான அனைத்து விபரங்களையும் 0112791909 அல்லது 0113069495 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு பெற்றுகொள்ளுமாறு கோரியுள்ள அமைச்சர் சுற்றுலா வீசாவினூடாக தொழில்வாய்ப்பை நாடி செல்லவேண்டாம் என்றும் அவ்வாறு செல்வது கடுமையான குடிவரவு குடியகழ்வு சட்ட மீறல் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான சட்டவிரோத செயலினதல் 293 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சில நாடுகளில் கடுமையான சட்டம் பின்பற்றப்படுவதனால் மரண தட்டணை, சாட்டையடி போன்ற பயங்கரமான தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.

எனவே, சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களிடம் அகப்பட்டு பணியக சட்டதிட்டங்களை மீற வேணடாம். இதனால் உயிரிழப்பு, வேலை கிடைக்காமை, அறியாத நாட்டில் கைவிடப்படுதல், தகவல் அறியாமை, சிறைத்தண்டனை போன்ற விபரீத தண்டனைகளை பெறவும் காரணமாக இருக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டு 389 பேரும் 2014ஆம் ஆண்டு 356 பெரும் 2015ஆம் ஆண்டு 352 பேரும் பல நாடுகளில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏதாவது ஒரு வகையில் சட்டவிரோதமாக வெளிநாடு செல்லவேண்டியேற்பட்டால் உடனடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறியத்தாருங்கள்.

தற்போது பிரதி முகவர்கள் (Sub Agent) பதிவு முற்றாக நீக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் ஆராய்வதற்கு உதவி பொலிஸ் அதிகாரியொருவரின் கீழ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தகவல் கிடைப்பின் 0112791909 அல்லது 0113069495 தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யலாம்.

கௌரவமான வெளிநாட்டு வேலைவாய்ப்பை செயற்படுத்துவதற்கு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன மிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்றும் ஊடகங்கள் உதவியும் இதற்கு மிகவும் அவசியம் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிகாட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435