கடந்த வாரம் வாசிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான எவ்வித முன்மொழிவும் காணப்படவில்லை. பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க அரசாங்கத்திற்கு முடியாவிட்டால் நடுத்தெருவில் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று தொழிலற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (14) கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே சங்கத்தின் அழைப்பாளர் தன்னே ஞாநாந்த தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், முன்னோக்கி செல்லக்கூடியவர்கள் எங்களுடன் இணையுங்கள் என்றுதான் இந்த அரசாங்கம் இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு விடுத்தது. அந்த இளைஞர் யுவதிகளுக்கு இம்முறை பாதீட்டில் என்ன வழங்கப்பட்டது. 30000 பட்டதாரிகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்தது? வியாபாரமொன்றை ஆரம்பிக்க 1.5 மில்லியன் ரூபாவை வழங்குவார்களாம். இதென்ன கேலிக்கூத்து? அதற்கும் 150 மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 100 பேருக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 30 000 பட்டதாரிகளுக்கு இவ்வாறுதான் தொழில் வழங்குவதா? இந்த பாதீட்டை மட்டுமல்ல, இந்த அரசாங்கத்தின் கொள்கையை மாற்றவும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
பட்டதாரிகளை மட்டுமல்ல இந்நாட்டிலுள்ள அனைவரையும் அழைக்கிறோம் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரயோசனமற்ற கொள்கையை மாற்ற போராடுவோம். பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் இந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதேவேளை, சங்கத்தின் அங்கத்தவர் அநுருத்த விக்கிரமாராச்சி கருத்து தெரிவிக்கையில், நாம் தொடர்ச்சியாக எமது கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைத்தோம். பாதீட்டுக்கான ஆலோசனைகளையும் வழங்கினோம். பிரதமர் உருவாக்கிய குழுவை மட்டுமே அரசாங்கம் நிறுவியது. இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வீதிக்கு இறங்குவதை தவிர எமக்கு வேறு வழியில்லை. ஆட்சியாளர்களுக்கு இந்நாட்டிலுள்ள பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் நடுவீதியை நாம் தெரிவு செய்ய வேண்டியேற்படும் என்று தெரிவித்தார்.