எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நான்காயிரம் பேருக்கு அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் என்பவற்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை காவலர்கள், நூலக உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்ற துறைகளில் சுமார் ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதுதவிர ஏனைய துறைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறுகிய அதிகாரத்திற்குள் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலேயே தேவைகளை பூர்த்தி செய்யப்படுகின்றன.
பல்வேறு சவால்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் பட்டதாரிகள் வேலையின்றி சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். மாகாணத்தில் இருக்கும் அரச நிறுவன வெற்றிடங்களுக்கு முடிந்தளவு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு சரியான பொறிமுறையொன்று இல்லாமையே வேலையில்லாத பிரச்சினையை எதிர்நோக்குவதற்கு பிரதான காரணமாக இருந்தது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் எப்போதும் பின்நிற்கப் போவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.