ஜப்பானில் 14 துறைகளில் வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தம் நேற்று (18) கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை அரசாங்கம் சார்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோவும் ஜப்பான் அரசு சார்பில் அந்நாட்டுத் தொழிற்றுறை அமைச்சரும் கைச்சாத்திட்டுள்ளனர்.
வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு மேற்பார்வை அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வொப்பந்தத்திற்கமைய எதிர்வரும் 10 வருடங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி இலங்கையர்கள் ஜப்பானில் தொழில்வாய்ப்பினை பெற முடியும். இவ்வாய்ப்பு 9 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஏழாவதாக வாய்ப்பு பெற்ற நாடாக இலங்கை அமைந்துள்ளது. இது அரசுக்கு கிடைத்த வாய்ப்பாகும்.
முதியோர் பராமரிப்பு, கட்டிட சுத்திகரிப்பு, முகாமைத்துவத்துறை, இயந்திரத்துறை, கைத்தொழிற்றுறை, இயந்திர உதிரிப்பாகத்துறை, மின்சாரத்துறை, நிர்மாணத்துறை, கப்பற்றுறை, போக்குவரத்து பராமரிப்புத்துறை, விமானச்சேவை, ஹோட்டல், விவசாயம், மீன்பிடி, உணவு உற்பத்தி மற்றும் உணவுக் கைத்தொழில் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புக்களை வழங்க ஜப்பான் அரசு முன்வந்துள்ளது.
இதற்கான பயிற்சி நெறிகள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் அதிக சம்பளத்துடனான வேலைவாய்ப்பை பெற முடியும்.
மேலும் இலங்கையின் தொழிற்கல்வித்துறை ஜப்பான் மட்டத்திற்கு உயரவும் அதனூடாக தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் கிடைத்த அருமையான வாய்ப்பாக இதனை கருத முடியும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக வௌியிடப்படும் பொய்யான பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் பணியகத்தை நாடுமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.