நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் வௌிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வௌிநாட்டு தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக கூறி நாட்டின் பல பாகங்களில் பலரின் பண மோசடி செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 18ம் திகதி பணியக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருவதாக இணையதளத்தினூடாக விளம்பரப்படுத்தி பணம் பறித்த பெண் மற்றும் அவருக்கு உதவிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடுவல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைகளின் பின்னர் இரு சரீரபிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இத்தாலியில் தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக கூறி 2,100,000 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு 6 முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து கம்பஹா, மொருபல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 20ம் திகதி பணியக அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் கம்பஹா நீதிமன்றில் நிறுத்தப்பட்டு விசாரணைகளையடுத்து அடுத்த மாதம் 3ம்திகதி வரை தடுப்புக் காலவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், டுபாய் உட்பட பல நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாக பண மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் எச்.ப் ட்ரவல்ஸ் என்ற பெயர் விமான டிக்கட் நிறுவனமொன்றுக்கு உரிமையாளர் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் பொரல்ல தொழில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு 3 இலட்சம் சரீர பிணையில் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக இம்மாதம் 30ம் திகதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.