மருதானை, புஞ்சி பொரளை பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை சுற்றிவளைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
தமக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கமைய சுற்றிவளைப்பில் ஈடுபட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு, அம்முகவர் நிலையத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளது.
அவ்விடத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையமொன்று நடத்தப்பட்டு வந்ததாகவும் அதன் அடிப்படையில் இம்முகவர் நிலையம் தற்போது இயங்குவதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இச்சுற்றிவளைப்பின் போது, முகவர் நிலையத்தில் இருந்து 12 கடவுச்சீட்டுக்கள், 6 விண்ணப்பப்படிவங்கள், ஒரு போலியான குடும்ப பின்னணி அறிக்கை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
போலி முகவர் நிலையங்கள் தொடர்பில் அறிந்தவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக விசேட விசாரணை பிரிவின் 0112 864 118, 0112 880 500 என்ற இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
வேலைத்தளம்