பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இராஜாங்க அமைச்சர் நேற்று (30) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான இராஜாங்க அமைச்சு புதிய இராஜாங்க அமைச்சாகும்.
ஆரம்ப சுகாதார சேவைகளை மிக உயர்ந்த தரத்திற்கு மேம்படுத்தி பராமரிப்பது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மக்களுக்காக, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு உயர் மட்ட சுகாதார சேவையை உறுதி செய்வதற்கு ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதும் விரிவாக்குவதும் அவசியம் என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.
கொவிட் 19 நோய் பரவலுடன் அனைத்து தொற்றுநோய்களையும் ஏலவே கண்டறிந்து கட்டுப்படுத்த ஒரு கொள்கை மற்றும் நடைமுறை சார்ந்த பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்காகவே புதிய இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே முன்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.