புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல்வேறு நன்மை பயக்கும் விடயங்கள் இம்முறை பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
பயிற்சி பெறாத தொழிலாளருக்கு வழங்கப்பட்ட ஆகக்குறைந்த சம்பளமான 300 அமெரிக்க டொலரானது இம்முறை பாதீட்டில் 350 அமெரிக்க டொலராக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பயிற்சி பெற்ற தொழிலாளருக்கான ஆகக்குறைந்த சம்பளம் 450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தளவு சம்பளம் இது வரை நிர்ணயிக்கப்படவில்லை. வெளிநாட்டு தொழில்வாய்ப்பை நாடி செல்லும் அனைத்து இலங்கையருக்கும் இது உரித்துடையது.
அதேபோல், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான முன்மொழிவும் இம்முறை பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய முன்மொழிவுக்கமைய ஊழியருக்கு 60 வயதில் ஓய்வூதிய கொடுப்பனவு சொந்தமாகிறு. அதற்கான நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.
வெளிநாடுகளில் பணியாற்றும் ஊழியர்களினால் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுக்கொடுக்கின்றனர். இலங்கையின் பொருளாதாரத்திற்கு அது பாரிய பங்களிப்பை வழங்குகிறது. அவ்வாறு பாரிய வருமானத்தை நாட்டுக்கு பெற்றுக்கொடுப்பவர்களுக்கு அதேயளவான நன்மைகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் குவைத் நிதியத்தில் உள்ள நிதியை பயன்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்நிதியமானது 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட குவைத் யுத்தத்தின் போது அங்கு தொழில்வாய்ப்பை இழந்த இலங்கையருக்கு நட்டஈடு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நிதியமாகும். அதில் உரிமையாளர்கள் இன்றி மிகுதியாகிய நிதி இதற்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
இம்முறை வரவுசெலவில் வெளிநாட்டில் பணியாற்றும் உங்கள் தொழில், சிறந்த வாழ்க்கைத் தரம் என்பவற்றை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வேலைத்தளம்