சட்டவிரோதமாக தங்கியுள்ள வௌிநாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தை நீடிக்குமாறு வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குவைத் அரசிடம் கோரியுள்ளது.
பொதுமன்னிப்புக் காலத்தை எதிர்வரும் மே மாதம் 30ம் திகதி வரை நீடிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இலங்கைக்கான குவைத் தூதுவர் கலாப் தஹசீருக்கும் இடையிலான சந்திப்பொன்று வௌிவிவகார அமைச்சில் இடம்பெற்றபோது இக்கோரிக்கையை அமைச்சர் விடுத்துள்ளார் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் இன்றுடன் (25) நிறைவடைகின்ற நிலையில் அமைச்சர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கான தங்குமிட வசதி மற்றும் உணவு என்பவற்றை குவைத் அரசு வழங்கியுள்ளது. இதேவேளை அந்நாட்டு அரசின் வழிகாட்டலுக்கமைய சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை பதிவு செய்யும் நடவடிக்கையை குவைத்துக்கான இலங்கை தூதரகம் ஆரம்பித்துள்ளது.
வௌிவிவகார அமைச்சின் குவைத்துக்கான இலங்கை தூதரகத்தின் தொழில்நலன் பிரிவினூடாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலில் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவினாத் ஆர்யசிங்க, வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.