மத்திய கிழக்கில் இலங்கையர்களின் அவலம்: வெளியாகும் பல அதிர்ச்சித் தகவல்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் தொழிலை இழந்து நாடு திரும்புவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அரசாங்கம் கூறியுள்ள எண்ணிக்கை தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் 43,000 பேர் தொழிலை இழந்து நாடு திரும்புவதற்காக பதிவுசெய்துள்ளனர் என அரசாங்கம் கூறி வருகின்ற நிலையில், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொழிலை இழந்து நாடு திரும்ப பதிவுசெய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தொழில் வாய்ப்பை இழந்துள்ள இலங்கையர்கள், தங்குமிட வசதி இல்லாமலும், உணவு இல்லாமலும், சுகாதார பாதுகாப்பு இன்றியும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் பத்தரமுல்லையில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னிலை சோசலிஷ கட்சியின் மத்திய குழு உறுப்பினர் புபுது ஜயக்கொட மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைப்பதில் அரசாங்கம் கடந்த காலம் காலத்தில் பாரிய கண்காட்சியை காண்பித்தது.

ஆரம்பத்திலேயே சீனாவின் வூஹான் பிராந்தியத்தில் இருந்து மாணவர்களை அழைத்து வருவதாக அரசாங்கம் பாரிய கண்காட்சியை காண்பித்திருந்தது.

அவர்கள் நாட்டுக்கு வந்து விமானத்திலிருந்து இறங்குவதை நேரலையாகவும் காண்பித்தது.

அதன்பின்னர் பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா முதலான நாடுகளிலிருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர ஆரம்பித்தது.

ஆனால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ள தொழிலாளர்கள் இந்த சந்தர்ப்பத்தில் மறக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் கல்வி கற்ற மாணவர்கள் இலங்கையில் செல்வந்த தரப்புகளை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களை நாட்டுக்கு மீட்டு வருவதில் அரசாங்கம் பெரும் அவசரத்தை காண்பித்தது.

அதேபோல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்த சற்று மேல்மட்டத்தை சேர்ந்தவர்களும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

ஆனால் நாட்டில் வறுமை நிலையில் வாழ்கின்ற மக்கள் தான் மத்திய கிழக்கிற்கு சென்றிருக்கின்றார்கள். அவர்களை நோயிலிருந்து பாதுகாப்பது அரசாங்கத்தின் தேவையாக இருக்கவில்லை. தற்போது ஒவ்வொரு கதைகளை அரசாங்கம் கூறிவருகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் பெருமளவான தொழிலாளர்கள் தொழிலை இழந்துள்ளனர். அவர்கள் தற்போது நாடு திரும்புவதற்காக பதிவு செய்துள்ளனர்.

அரசாங்கம் கூறும் எண்ணிக்கையும் தவறானது. 43,000 பேர் தொழிலை இழந்து மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்ப இருக்கின்றார்கள் என வெளிவிவகார அமைச்சும் கூறுகின்றது.

ஆனால், நாங்கள் நேற்றைய தினம் டுபாயில் உள்ள இலங்கை தூதரகத்துடன் உரையாடி இருந்தோம். அங்கு சுமார் 58 ஆயிரம் இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்து நாடு திரும்புவதற்கான பதிவு செய்யப்பட்டுள்ளன என தூதரக அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளை எடுத்துக்கொண்டால், எண்ணிக்கைகூட சரியாக தரியாது. தகவல்களின் அடிப்படையில் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொழிலை இழந்து நாடு திரும்புவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரியவருகின்றது.

தொழிலை இழந்துள்ளவர்களுக்கு தற்போது சுகாதார காப்புறுதி இல்லை. அந்த நாடுகளில் இலவச சுகாதார சேவை இல்லை. சுகாதார காப்புறுதி முறைமையே இருக்கின்றது. அவர்கள் தொழிலில் ஈடுபடும் காலம் வரையில் மாத்திரமே சுகாதார காப்புறுதி இருக்கும்.

அவர்கள் தொழிலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டால், அவர்களுக்கு சுகாதார காப்புறுதி இருக்காது. அவர்கள் நோய்வாய்ப்பட்டால் வைத்தியசாலைகளுக்கு சென்று மருந்துகளை எடுக்க முடியாது.

அத்துடன், அவர்கள் தாங்கள் தங்கும் இடத்திற்கான வாடகையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அவர்கள் தங்கும் இடத்துக்கான வாடகையை செலுத்தாததன் காரணமாக, மே மாதத்தில் அவர்கள் தங்களது தங்குமிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தங்குவதற்கு ஒரு இடம் இல்லை. தற்போது பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் சென்று தங்கி இருக்கின்றனர். சிலருக்கு அவ்வாறான இடமும் இல்லை.

அவர்கள் உணவுகளைப் பெற்றுக் கொள்வதும் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது குறித்து நாங்கள் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு வினவியபோது, தூதரக காரியங்களின் ஊடாக உணவுகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர்.

ஆனால், இப்போதுவரை கட்டார், டுபாய் குவைட்டில் உள்ள எவருக்கும் உணவு கிடைப்பதில்லை. அபுதாபியில் எவருக்கும் உணவு கிடைப்பதில்லை. ஒருவருக்கு கிடைக்கும் உணவு உண்பதற்கு போதுமானதாக இல்லை. உதாரணமாக பத்து பேருக்கு ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் உணவை எடுத்துக்கொண்டால், அந்த உணவு அவர்களுக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு மாத்திரமே உண்ண முடியும்.

பெருமளவானவர்கள் ஒரு நாளைக்கு ஒரு பரோட்டாவை உண்டு, ஒரு கோப்பைத் தேநீரை அருந்தி தான் வாழ்ந்து வருகின்றனர். எனவே, உணவு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, சுகாதாரம் தொடர்பில் பாரிய பிரச்சினை இருக்கின்றது. கட்டாரில் மாத்திரம் 1800 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

டுபாயில் 400 பேரும் குவைத்தில் அதிகமானோர் என்று கூறப்படுகின்றது. குவைட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை.

அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கு வழியில்லை. டுபாயில் பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கு 200 திர்ஹாம் அவசியமாகும். இலங்கை ரூபாயில் எடுத்துக்கொண்டால் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை ஆகின்றது. ஒரு பக்கட் உணவை வாங்குவதற்கு வழியில்லாதவர்கள் இடம் எவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனைக்கு பணத்தை ஒதுக்குவார்கள்? அவர்கள் பரிசோதனை செய்து கொள்வதற்கான வழி இல்லை.

சில சந்தர்ப்பங்களில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டால் அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் ஒரு கட்டிடத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

கொவிட்-19 தொற்று உறுதியாகுபவர்களுக்கு கட்டிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அது வைத்தியசாலை அல்ல, அங்கு வைத்தியர்கள், தாதியர்கள் இல்லை. வைத்திய உபகரணங்களும் இல்லை.

டுபாயில் அவ்வாறான ஒரு கட்டிடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒரு இளைஞன் இன்று காலை என்னுடன் உரையாடினார்.

தனக்கு கொவிட்-19 உறுதியாகியுள்ளதாகவும், தன்னை அந்த அரசாங்க கட்டிடத்தில் தங்க வைத்திருப்பதாகவும், ஒரு பரசிட்டமோல் மாத்திரையும், விட்டமின் சி 1,000 மில்லி கிராம் மாத்திரை ஒன்றும், கொதிநீரும் தனக்கு கிடைப்பதாக அந்த இளைஞன் குறிப்பிட்டார்.

இவ்வாறான பாரிய அபாய நிலைதான் இந்த தொழிலாளர்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ளது.

இந்த தொழிலாளர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வரவேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

அண்மையில் ஜெர்மனி, லண்டனில் இருந்து விமானங்கள் இலங்கைக்கு வந்தன. அவர்களை அழைத்து வந்தனர். அது போல இவர்களையும் நாட்டுக்கு அழைத்து வாருங்கள் என்று நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அவர்கள் அனைவரையும் நாட்டுக்கு ஒரேடியாக அழைத்து வந்தால் வைத்தியசாலைகளில் இடவசதி இல்லை என்று அரசாங்கம் கூறுகின்றது.

அப்படியானால், நாங்கள் ஒரு பிரஜையையும் கைவிடமாட்டோம். மேற்குலக நாடுகளை போல முதியோர்கள் இழப்பதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். அனைவரினது உயிர்களும் எமக்கு முக்கியமானது என்று கொவிட்-19 பரவ ஆரம்பித்த போது அரசாங்கம் கூறியது. இப்போது என்ன நடக்கிறது?

எனவே, மத்திய கிழக்கில் உள்ள தொழிலாளர்களை அரசாங்கம் உடனடியாக நாட்டுக்கு அழைத்துவர வேண்டும் என வலியுறுத்துவதாக புபுது ஜயக்கொட தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435