இலங்கையின் அரச தேசிய பத்திரிகை நிறுவனமான லேக் ஹவுஸ் ஊழியர் சங்கம் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (6) ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
பத்தாயிரம் சம்பள உயர்வு, லேக் ஹவுஸ் நிறுவனத்தை சுயாதீன பொதுச்சேவை ஊடக நிறுவனமாக மாற்றுதல், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் சம்பள உயர்வு வழங்குதல் மற்றும் நிறுவனத்துக்கும் லேக்ஹவுஸ் நிறுவன தொழிற்சங்கத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்தல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஐம்பத்தைந்து வயதாகும் ஊழியர்களுக்கு ஓய்வளிக்கும் லேக்ஹவுஸ் நிறுவன நிர்வாகம், புதிதாக 60 வயதுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் இணைத்துக்கொள்கின்றமை நியாயமற்ற செயல் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
சுயாதீன தொலைக்காட்சி, ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் புதிய முகாமை பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள போதிலும் பத்திரிகையின் வளர்ச்சிக்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் தேவையற்ற விடயங்களுக்காக நிதியை செலவிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள இத்தொழிலாளர் சங்கம் சில ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற ஊக்குவிப்பு கொடுப்பனவை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
வேலைத்தளம்