ஸ்ரீலங்கன் விமான சேவை விமானிகள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை செய்தல் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எதிர்வரும் காலத்தில் இலங்கைக்கான விமானப் பயணங்களில் தடை ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவை விமானிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனமோ அல்லது அரசாங்கமோ இதுவரை தமது கோரிக்கைகளுக்கு பதில் வழங்காமையினால் தமது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் அநுர அபேசேகர தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜெர்மனியின் பிராங்போட் விமானநிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு அமைவாக விமானிகளிடம் மீண்டும் மதுபான பரிசோதனையை ஆரம்பிப்பதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்தமையை தொடர்ந்து இவ்வாறு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தோடு, ஒத்துழைத்து பணியாற்றப்போவதில்லை என்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் காரணமாக, எதிர்வரும் நாட்களில், விமானப் பயணங்கள் தாமதமாகக்கூடும் என்று ஸ்ரீலங்கன் விமான சேவை விமானிகள் அமைப்பு தெரிவிக்கின்றது.
எங்களது கோரிக்கைகளுக்கு, இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனடிப்படையில் இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பில் எந்தவிதமான இறுதி தீர்மானங்களும் எடுக்கப்படாமலுள்ள நிலையில் ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது இவ்விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களோ தலையிட்டு உடனடியான தீர்மானத்துக்கு வர வேண்டும். அவ்வாறின்றேல் இப்போராட்டம் தீவிரமடையும் சூழ்நிலையே காணப்படுகின்றது என்றார்.
வேலைத்தளம்/ வீரகேசரி