முல்லைத்தீவு கரையோரப்பிரதேசங்களில் வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முகவத்துவாரம், நல்லத்தண்ணித்தொடுவாய் தொடக்கம் பேய்ப்பாறைப்பட்டி வரையான 74 கிலோ மீற்றர் வரையான கரையோரப்பிரதேசத்தையும் ஆழ்கடற் பிரதேசத்தையும் வாழ்வாதாரமாக நம்பி சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இப்பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியை மீறிய மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையினால் இம்மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
நிபந்தனையை மீறிய அட்டைத் தொழில், வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், கரைவலைப்பாடுகளில் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் சிறுகடல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்ளுதல் என்பன மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு தடையாக காணப்படுகிறது.
அதிக விலை கொடுத்து மீன்பிடி உபகரணங்கள் வாங்கியும் அவற்றை பயன்படுத்தி மீன்பிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. தற்போது எமது அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு கூலி வேலை செய்யவேண்டியுள்ளது என்று அம்மீனவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது தற்போது குறைவடைந்துள்ள போதிலும் வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமை உண்மைத்தான். எனினும் வெளிமாவட்ட மீனவர்கள் அனுமதியுடனேயே இப்பிரதேசத்தில் வந்து மீன்பிடிக்கின்றனர். இதனால் இம்மாவட்ட மீனவர்கள் பெரும் வாழ்வாதாரச் சிக்கலை எதிர்நோக்குகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்/ நன்றி- வீரகேசரி