அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கான சரியான தீர்வை பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் தலையிட தவறினால் எதிர்வரும் 15ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
பிரதேசங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் தமது பணியை செவ்வனே செய்ய முடியாமல் சிரமப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜேரத்ன அதற்கான உடனடி தீர்வைப் பெற்றுத்தர அரசாங்கம் முன்வர வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வேலை நிறுத்தத்தில் அதிக வாகன நெரிசல் காணப்படும் 30 வீதிகளை பயன்படுத்தும் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக குறித்த 30 வீதிகளில் போக்குவரத்து வேகமானது மணிக்கு நான்கு கிலோமீற்றர் குறைவதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன் கடுவெல- கொள்ளுபிட்டிய (177) வீதியில் செல்வதற்கு காலை வேளை சுமார 3 மணித்தியாலம் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, பத்தரமுல்ல- தெஹிவல (163) 12 கிலோ மீற்றர் தூரத்தை கடப்பதற்கு 2 மணித்த்தியாலங்களுக்கு மேல் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தனியார் பஸ் உரிமையாளர்களும் பயணிகளும் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில் தனியார் பஸ் போக்குவரத்து வியாபாரத்தை முன்னெடுப்பது சாத்திப்படாது என்றும் பிரச்சினையை குறைத்துக்கொள்வதற்கு தீர்வொன்றை பெற்றுதர அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.