அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுத் தொகையை 2200.00 ரூபாவால் அதிகரிக்குமாறு அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனம் நிதியமைச்சரிடம் கோரியுள்ளது.
இம்முறை வரவுசெலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 2020ஆம் ஆண்டில் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவையாவது அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
வரவுச்செலவு முன்மொழிவில், வாகன விலை அதிகரிப்பு, வட்டிவீத அதிகரிப்பு, தொலைபேசி வரி அதிகரிப்பு, வைப்பீட்டிலிருந்து வரி அறிவிடல் போன்ற முன்மொழிவுகளை நோக்கும் போது அரச அதிகாரிகளின் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்குரியதாக இருக்கும் என்றும் இம்முறை பாதீட்டில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பிலோ, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு தொடர்பிலே குறிப்பிடப்படவில்லை என்று சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலதிக நேர கொடுப்பனவு பெறாத சுமார் 5 இலட்சம் அரச ஊழியர்கள் பாரிய பொருளாதார சிக்கலை எதர்நோக்கி வருவதாகவும் தற்போது வழங்கப்படும் 7800.00 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை அதிகரித்து வழங்குமாறும் அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.