பெருந்தோட்டத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பெயர் , அடையாள அட்டை விபரங்கள் சரியான முறையில் பதியப்படாத காரணத்தினால் அவர்களுக்கு சொந்தமான பல இலட்சக் கணக்கான நிதி மீண்டும் திரைசேரிக்கு அனுப்பி வைக்கும் அபாக்கிய நிலைமை காணப்படுவதாக இலங்கை விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் டி. மாதவன் கவலை வௌியிட்டுள்ளார்.
தேசிய பத்திரிகையான வீரகேசரிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பெருந்தோட்ட நிர்வாகங்களில் வேலைக்கு சேரும் தொழிலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கான ஊழியர் சேம லாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் என்பவற்றை வழங்குவதற்கான ஏ மற்றும் பி பத்திரங்களே பூர்த்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு பூர்த்தி செய்யப்படும் பத்திரங்களில் சரியான முறையில் பெயர், முகவரி மற்றும் அடையாள அட்டை விபரங்களை பதிவதில் நிர்வாகம் காட்டும் அசிரத்தை காரணமாக பல்வேறு குறைப்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே 55 வயது பூர்த்தியடைந்ததும் தமது பணத்தை எடுக்கச் செல்லும் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இவ்வாறு சரியான முறையில் பத்திரங்களில் நிரப்பப்பட்டு பதிவு செய்யப்படாதமையினால் தொழிலாளர்களுக்கு சொந்தமான இலட்சக் கணக்கான நிதி மீண்டும் திரைசேரிக்கு சொந்தமாகியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
நிரப்பப்படும் பத்திரங்களில் என்ன எழுதப்படுகிறது என்று தொழிலாளர்களுக்கு காட்டப்படுவதில்லை. இதனால் பெயர் பிழையாக எழுதப்பட்டாலும் அது குறித்து அவர்கள் தெரிந்துக்கொள்ள வாய்ப்பு கிடைப்பதில்லை. ஓய்வு பெற்ற பின்னர் தான் அவர்கள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே தொழிற்சங்கங்களும் தோட்ட நிர்வாகமும் தொழிலாளர்களின் ஊழியர் சேம லாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் என்பவற்றின் பத்திரங்களை சரியான பூர்த்தி செய்து பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் தொழிலாளர்களின் விபரக்கோவையொன்றையும் தயாரித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.