மாநகரசபையில் பணியாற்றும் துப்புறவுத் தொழிலாளர்களுக்கு தூசு கொடுப்பனவு (Dust Allowance) கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சர் , ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நகர ஆணையாளர்களிடம் கோரியுள்ளார்.
கழிவுகளை வகைப்படுத்தி சேர்ப்பதில் உள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கூட்டத்திலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அமைச்சர் பைசல் முஸ்தபாவின் எண்ணக்கருவில் உருவான குப்பைகளை வகைப்படுத்தி சேகரிக்கும் திட்டம் கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமானது. அதனை தொடர்ந்து மாநாகரசபைக்கு உட்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் குறித்த வேலைத்திட்டத்தை பார்வையிட்டார். மேலும் துப்புறவு தொழிலாளர்களை நேரில் சந்தித்த அமைச்சர் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார். இதன்போது துப்புறவு தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைக்கமையவே தொழிலாளர்களுக்கான துப்புறவு கொடுப்பனவு வழங்குமாறு அமைச்சர் தெரிவித்தார்.
மாநகரசபை சுகாதார நிமித்தம் சேவையாற்றும் துப்புறவுத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர், தொடர்ந்து கிருமிகளுடன் போராடும் துப்புறவுத் தொழிலாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கும் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர்களுக்குத் தேவையான மேலாடைகள், காலணிகள் என்பவற்றை தொடர்ச்சியாக வழங்குமாறும் அவற்றை அணிந்துகொண்டு துப்புறவு பணியில் ஈடுபடுமாறு துப்புறவுத்தொழிலாளர்களை ஊக்கப்படுத்தமாறும் ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.