சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள சுமார் 5000 ஆளணி வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வறுமை ஒழிப்புத் தொடர்பான ஜனாதிபதியின் இலக்குகளை நிறைவேற்றும் நடைமுறையில் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சிடம் அதிகளவிலான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதால் இவ்வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன என்று அவ்வமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டார்.
சமுர்த்தியின் மூலம் வங்கி வலைப்பின்னலும், சமூக பாதுகாப்பு இயக்கமும் வீடமைப்பு அபிவிருத்தித் திட்டமும் சிறப்பான முறையில் கட்டியெழுப்பப்பட்டன.
எவ்வாறேனும் கடந்த 10 ஆண்டுகளில் சமுர்த்தி வங்கிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை தொழில் முயற்சியாளர்களுக்கு உரிய முறையில் வழங்க முடியாமல் போனது. இதற்கு முகாமைத்துவத்தின் குறைபாடு காரணமென அமைச்சர் திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு சேமிப்புப் பணத்தை கூடுதல் வட்டி கிடைக்கும் இடங்களில் முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முறையான கணக்காய்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.