இலங்கையின் அரச மருத்துவர்கள் சங்கத்தினர் இன்று 4 மணிநேர அடையாள பணிப்கிஷ்கரிப்பை
ஆரம்பித்துள்ளனர். இன்று காலை 8 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை இந்த அடையாள பணி பகிஷ்கரிப்பு நடைபெறவுள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் நேற்று (02) நடத்திய போராட்டப் பேரணி மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிந்தே இந்த அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அரச மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாலபே தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளை இலங்கை மருத்துவ சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த நிலையில், மாலபே மருததுவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து களனி மருத்துவப்பீட மாணவர்கள் நேற்று போராட்டப் பேரணி ஒன்றை நடத்தினர்.
இந்தப் பேரணிக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. இருப்பினும், கொழும்பு – கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகம் வரை மாணவர்கள் தமது பேரணியை நடத்தினர்.
இதன்போது ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட கோட்டை வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், போராட்டத்தின்போது மாணவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் அசௌகரிய நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதனால், பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். இதன்போது நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் 12 மருத்துவப்பீட மாணவர்கள் பொலிஸாரல் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று நான்கு மணிநேர அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.