கண்டி ஹுன்னஸ்கிரிய எயார்பார்க் தோட்ட மக்கள் கடந்த நான்கு நாட்களாக இரவுபகலாக நடத்திவந்த சத்தியாக்கிரக போராட்டம் நேற்று மாலை (03) தற்காலிகமாக நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கை செங்கொடி சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை செங்கொடி சங்கத்தின் செயலாளர் மேனகா கந்தசாமி தெரிவிக்கையில்,
கண்டி ஹுன்னஸ்கிரிய எயார்பார்க் தோட்ட மக்கள் கடந்த மாத இறுதியில் ஆரம்பித்து கடந்த மூன்று நாட்களாக நடாத்தி வரும் சத்தியாகிரக போராட்டத்தை தொடர்ந்து கண்டி மாவட்ட தொழில் திணைக்கள ஆணையாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் (02) கொழும்பிலுள்ள அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் பிரதிநிதி ஒருவருக்கும், இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்துக்கும் ஆர்ப்பாட்டகாரர்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்றது.
நேற்று முன்தினம் கொழும்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அரச தோட்டக்காணிகள் தனியாருக்கு வழங்குவது தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் மக்களுடன் பேசி தீர்மானிக்கப்படுமென எழுத்து மூலம் உறுதிவழங்கப்பட்டது.
ஆனால் 20 நாட்கள் வேலை வழங்கப்படவேண்டும் மாற்று அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மாற்று வழிகள் மேற்கொள்ளப்படவேண்டும் போன்ற மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக பேசுவதற்கு முடிவெடுக்கவில்லை. வாய்மொழி மூலம் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படுமென கூறப்பட்ட போதும் எழுத்து மூலம் வழங்கிய கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடவில்லை.
இந்த செய்தியை நேற்று போராட்டக்காரர்களிடம் கூறினோம். அதற்கு அவர்கள் தங்களுக்கு இரண்டு ஏக்கர் காணியை குத்தகைக்கு வழங்கவும் தமது வாழ்வாதாரத்துக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை காலவரையறை குறிப்பிட்டு எழுத்துமூலம் உறுதிவழங்க வேண்டுமென தெரிவித்தனர்.
அதனடிப்படையில் நேற்று இலங்கை பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டது. அந்தக் கோரிக்கைக்கு அமைவாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏனைய அரசாங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மூன்று வாரங்களுக்குள் மக்களுக்கு காணியை குத்தகைக்கு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலிக்க திட்டமிட்டு அது தொடர்பாக வேலைத் திட்ட நடவடிக்கையை எடுப்பதாக எழுத்து மூலம் உறுதியளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் மூன்று வாரத்துக்குப் பின்னர் தமக்கு முறையான தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடருவோம் என தெரிவித்தனர்.