எதிர்வரும் 30ஆம் திகதி வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் அவ் மாவட்டங்களின் மாவட்டசெயலகம் முன்பாக எமது வேலைவாய்ப்பிற்கான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளவுள்ளனர்.
அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் இணைந்து தமது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள இக்கவனயீரப்பு போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் தமது ஆதரவினை தெரிவித்துள்ளன.
தற்போது மற்றும் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கான சரியான பொறிமுறையை உருவாக்க அழுத்தம் வழங்குவதுடன் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை விரைவுபடுத்த உதவுமாறு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஏனைய சமூக நிறுவனங்களிடமும் கோரியுள்ளது.
வடமாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க வேலையற்ற பட்டதாரிகளின் தரவுகள் கையளிக்கப்பட்டுள்ளன. ஆளுநர் செயலகத்தில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மத்திய அரசிற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு இவ் வாய்ப்பை பயன்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. தொடர்ச்சியாக எமது கோரிக்கைகளுக்கு விரைவான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக துரிதமாக மேற்கொள்ளப்படவேண்டும். விரைவான தீர்வு கிடைக்கவேண்டும்.
ஓரு மாதம் கடந்தநிலையிலும் தொடர்ந்தும் வாகன இரைச்சல் புகை நுளம்புக்கடியுடன் வீதியில் உறங்கும் துர்ப்பாக்கிய நிலையிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும் தோழர்களே நாம் எல்லோரும் ஒன்றுகூடி எம் குரல் ஓங்கி ஒலிக்க வாருங்கள் தோழர்களே என வட மாகாண பட்டதாரிகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.