கிழக்கு பட்டதாரிகள் நியமனம்- விசேட அமைச்சரவைக் கூட்டம்

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்குள் உள்வாங்குவதற்கான மாகாண அமைச்சரவையின் விசேட கூட்டம், நாளை 17ஆம் திகதி இடம்பெறும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், முதலில், மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் என்னென்ன பாடங்களுக்காக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற விவரங்களைப் பெறும் வேலைகள், அடுத்த ஓரிரு நாட்களில் ஆரம்பித்து விடும். அதற்கான பணிப்புரைகள், உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன.

இம்மாதம் 17ஆம் திகதி இடம்பெறுகின்ற மாகாண அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், அடுத்து வரும் ஓரிரு வாரங்களுக்குள், பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்குள் உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள், மாகாண சபையால் கோரப்படும்.

இதன்படி உடனடியாக ஆயிரம் பட்டதாரிகளும், அதன் பின்னர் கட்டங்கட்டமாக தொடர்ச்சியாக ஏனையோருக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

வேலைவாய்ப்பின்றி தொழிலுக்காக போராடும் பட்டதாரிகளுக்கு அநீதிகள் ஏற்படாமல் தடுப்பதற்காக, தற்போது வேறு அரச தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பட்டதாரிகள், தற்போது மாகாண சபையால் கோரப்படவுள்ள விண்ணப்பங்களின்போது அதற்கு விண்ணப்பிப்பதில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மாகாண அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள், உடனடியாக அமுல்படுத்தப்படும் வகையில் அறுதியாகவும் உறுதியாகவும் இருக்கும்.
கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளிலுள்ள 4,784 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை, தேசிய முகாமைத்துவத் திணைக்களம், கிழக்கு மாகாண சபைக்குக் கடந்த வாரம் வழங்கியிருந்தது.

அந்த அனுமதியின் பிரகாரமே, உடனடியாக 1,000 பேரும் பின்னர் கட்டங்கட்டமாக ஏனைய அனுமதி வழங்கப்பட்ட 3,784 பேரும் நியமனம் செய்யப்படவுள்ளனர் என்றார்.

ஈழநாதம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435