மலையக பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தமிழகத்தில் இருந்து ஆசிரியர்கள் அழைக்கப்பட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பினை பெற்றுதருமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை அழைப்பிப்பது என்பது நியாயமற்ற செயல் என்று சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மருதானை சனசமூக நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மேற்கொள்ளப்படவுள்ள எட்கா ஒப்பந்தத்தின் முன்னோட்டமாகவே ஆசிரியர்களை இந்தியாவில் இருந்து அழைப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக நாம் கருதுகிறோம். பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெறாது மேலும் புதிய பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது.
வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை கோரி சம்பளத்திற்கு மேலதிகமாக தங்குமிட மற்றும் உணவுக்கான மேலதிக கொடுப்பனவையும் வழங்கி குறித்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கலாம். தமிழக ஆசிரியர்களை தருவிப்பதனூடாக செலவு அதிகரிப்பது மட்டுமன்றி இரு நாடுகளுக்கிடையிலும் உள்ள கல்வி முறைகளிலும் பாரிய வேறுபாடு உண்டென்பதையும் புரிந்து செயற்படவேண்டும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு உள்ள வழிகளை ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்லவேண்டியேற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.