ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் இந்த மாதத்திற்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லையென தொண்டர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆசிரிய உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அண்மையில் கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிறிஷ்ணன் அறிவித்திருந்தார்.
எனினும் இதுவரையில் அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனவும், மே மாதத்துக்கான கொடுப்பனவாக ஆறாயிரம் ரூபாவே வழங்கப்படுகின்றதாக தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஆசிரிய உதவியாளர்கள்,
ஆசிரிய உதவியாளர்களுக்கான கொடுப்பனவு இந்த மாதம் முதல் 10 ஆயிரம் ரூபாவாக வழங்கப்படும் என கல்வி இராஜங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.
பெப்ரவரி மாதம் முதல் நிலுவைக் கொடுப்பனவுடன், இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இந்த மாதத்துக்கான கொடுப்பனவு, அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுடன் வழங்கப்படவில்லை. 6 ஆயிரம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது.
அன்றாட செலவுகளுக்கே இந்த 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லாத நிலையில், எதிர்வரும் காலங்களில், பயிற்சிக்காக ஆசிரியர் கல்லூரிக்கு செல்லவுள்ளதாகவும், அதற்கான செலவுகளை இந்த 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் முகாமைத்துவம் செய்ய முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே, அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரிய உதவியாளர்கள் தெரிவித்தனர்.