மட்டக்களப்பு கல்விவலயத்தில் இடம்பெற்ற முறையற்ற ஆசிரிய இடமாற்றத்திற்கு மாகாண கல்வியமைச்சரும் கல்விப்பணிப்பாளருமே பொறுப்புக்கூற வேண்டும் என்று கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டு, மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆரயம்பதியில் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கல்குடா கல்வி வலயத்தில் இருபத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதிலீடுகள் இன்றி இடமாற்றம் செய்துள்ளனர். கல்குடா பிரதேச மாணவர்களின் கல்வி வீழ்ச்சியை நோக்காக கொண்டே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன். இவ்வகை முறையற்ற இடமாற்றங்களுக்கு மாகாண கல்வியமைச்சரும் கல்விப்பணிப்பாளரும் பொறுப்புகூற வேண்டிய கடப்பாட்டில் உள்ளனர்.
பத்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம் வழங்காமல் அரசியல் லாபத்திற்காக இரண்டு மூன்று வருடங்கள் பணியாற்றியவர்களுக்கு எவ்வாறு இடமாற்றம் வழங்க முடியும். இதனால் மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை உணரவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.