தற்போது காணப்படும் 1725 கிராமசேவையாளர் வெற்றிடங்களுக்கு விரைவில் புதிய கிராம சேவையாளர்கள் நியமிக்கப்படுவாரகள் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய (07) பாராளுமன்ற அமர்வின் போது ஓய்வு பெற்ற கிராமசேவையாளர்களை மீண்டும் சேவையில் இணைப்பது தொடர்பான எதிர்கட்சி பிரதான அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது 1725 கிராம சேவையாளர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கடந்த செப்டெம்பர் மாதம் பரீட்சை நடத்தப்பட்டது. பெப்ரவரி மாத தொடக்கத்தில் பெறுபேறுகளை வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நியமனங்கள் வழங்கும் போது 50 வீதம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்று கிராம சேவையாளர் சங்கத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டது. அமைச்சு என்ற வகையில் நாம் அதனை ஏற்றுக்கொள்ளாமல் கலந்துரையாடினோம். இதனால் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது நாம் இறுதித் தீர்மானத்தை எட்டியுள்ளோம். அதற்கமைய மாவட்ட ரீதியாக நியமனங்களை வழங்குவதற்கான இணைத்துக்கொள்கின்றமை தொடர்பில் உறுதி செய்யப்பட்டு உரிய பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.