கிழக்கு மாகாணத்தில் உள்ள 1441 வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாக மாகாண முதலமைச்சர் ஹாபீர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் களுதாவளையில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
நியமனம் வழங்குவது தொடர்பில் கிழக்கு மாகாணசபை தீர்மானமெடுத்தபோதிலும் நியமனம் வழங்கும் திகதி அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதுடன் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
நியமனமத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 26ம் திகதிக்கு பின்னர் கோரப்படும். இதற்கு வேலையற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் 1742 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனூடாக கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.