வேலையற்ற பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்வதற்காக மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்கள் விண்ணப்பங்கள் கோரியுள்ளபோதிலும் அதில் தௌிவின்மை காணப்படுவதாக அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தியதன் வெற்றியாக இதனை பார்த்தபோதிலும் உள்ள குறைகளை விரைவில் நிவர்த்தி செய்தால் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு பலன் கிடைக்கும் என்று அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் நஸ்றுதீன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விண்ணப்பக்கோரலில் வயதெல்லை 21 – 35 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொருத்தமானதல்ல. அப்படியானால் 35- 45 வயது வரையான வேலையற்ற பட்டதாரிகளின் நிலை என்ன? அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் கிடைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். வேலையற்ற பட்டதாரிகளில் பெரும்பாலானவர்கள் 35 வயதைக் கடந்தவர்கள். அவர்களை கைவிடப்போகிறதா அரசாங்கம். எம்மை மீண்டும் போராட்டத்திற்கு தூண்டப்பார்க்கிறதா?
பட்டம் பெற்ற ஆண்டுக்கமைய விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது அனைத்து பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலா என்பதும் தௌிவாக குறிப்பிடப்படவில்லை. மாகாண விண்ணப்பக்கோரலில் வயதெல்லை 40 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாண ஆளுநரிடம் கதைத்து 45ஆக அதிகரிக்கப்போவதாக தெரிவித்திருந்தார். அப்பேச்சுவார்தை இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் வயதெல்லை 40 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் நிலவிய அசாதாரண சூழ்நிலை மற்றும் பொருளாதார சிக்கல் என்பவற்றின் காரணமாக சில பட்டதாரிகள் 45 வயதைக் கடந்து சில மாதங்கள் ஆகிய நிலையில் உள்ளனர். அவர்களுடைய நிலைமை என்ன?
இவ்வாறான பிரச்சினைகளை ஆராய்ந்து தௌிவான விண்ணப்பக்கோரலை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.