2020ஆம் ஆண்டுக்குள் புகையிலை பயிர்ச்செய்கை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், வட மாகாணத்தில் அதற்கான மாற்று திட்டங்கள் கோரப்பட்டுள்ளன.
ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் செயலாளர் நாயகமான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் புகையிலை உற்பத்தியினை நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் 741.615 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சுமார் 27 ஆயிரத்து 952 குடும்பங்கள் புகையிலை பயிர்ச்செய்கைளில் ஈடுபட்டு வருகின்றன. இது வடக்கின் மொத்த விவசாய செய்கையாளர்களில் நூற்றுக்கு 10.87 வீதமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், புகையிலை பயிரிச்செய்கையானது வெளிநாட்டு செலாவணிகளிகளை அதிகம் ஈட்டக்கூடிய பயிரிச்செய்கை எனவும் அதனை தடை செய்யவதற்கு முன்னர் இதுதொடர்பான ஆய்வுகளில் ஈடுப்பட வேண்டும் எனவும் விவசாய அமைச்சிடம் கோரப்பட்டுள்ளது.
புகையிலை உற்பத்தி தடை எனில், அதனை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவதற்கும், அதற்கான மாற்றுப் பயிர்களை விரைவில் அறிமுகப்படுத்தி, அதற்கான பயிற்சிகள் மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கும் விவசாய அமைச்சு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வடக்கில் மண் வளத்தை ஆராய்ந்து, தற்போதைய உலகச் சந்தையின் கேள்விகளுக்கு பொருத்தமான, பொருளாதார ரீதியில் அதிகம் பெறுமதிவாய்ந்த பயிர்களை அறிமுகம் செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.