கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை செப்டெம்பர் 15ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டு வரப்படுவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரால் எடுக்கப்பட்ட முயற்சி வரவேற்கத் தக்கது என கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து ஜெயராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண தமிழாசியர் சங்கத்தினால் நேற்று (24) அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த பல வருடங்களாக கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையினால் கல்விப் போதனைச் செயற்பாடுகளில் பல சவால்களுக்கு முகங் கொடுக்க வேண்டியிருந்தது.
ஒருபுறம் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிக் கொண்டிருக்க மறுபுறம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகள் தெருவுக்கு வந்து வேலை கேட்டு மாதக் கணக்கில் போராட்டம் நடாத்தியிருந்தனர்.
இந்த இரு வகையான நெருக்கடிச் சூழ்நிலைகளுக்கும் ஒருங்கே தீர்வு பெற்றுக் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் பயனாக பிரதம மந்திரியின் அனுமதியோடு 1700 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம் பெறுகின்றனர். இது கிழக்கு மாகாண கல்விப் புலத்தில் கல்வி அபிவிருத்திக்கான ஒரு வெற்றியாகும்.
அதேவேளை, புதிதாக நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில்தான் தாங்கள் கற்பிக்க வேண்டும் என்று அடம்பிடிக்காமல் ஓரளவுக்கேனும் தங்களைத் தியாகம் செய்து பின்தங்கிய பாடசாலைகளுக்கும் சென்று கற்பிக்க வேண்டும்.
இதன் மூலம் யுத்தத்தினாலும் மற்றும் இயற்கை அழிவுகளினாலும் பாதிக்கப்பட்டுப் போயுள்ள இந்த கிழக்கு மாகாணக் கல்வியை மீண்டும் வளர்ச்சி நிலைக்குக் கொண்டு வர உதவ வேண்டும்.
கல்வியை மறுமலர்ச்சிக்குக் கொண்டு வருவதில் தமிழ் முஸ்லிம் சிங்களம் என்ற பேதமில்லாது கல்வி மறுமலர்ச்சிக் கூடாக கிழக்கின் சமாதானத்தையும் கட்டியெழுப்ப புதிய ஆசிரியர்கள் உறுதிபூண வேண்டும்.
எழுவன் நியுஸ்