2017/2018 கல்வி ஆண்டுக்காக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் நாளை மறுநாள் (06) நடைபெறும் என்று ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் கே.எம்.எச் பண்டார அறிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனை, கொட்டகல, கோப்பாய் ஆகிய பயிற்சிக் கல்லூரிகளுக்கு தமிழ் மாணவர்களும் உனவமுன, பலபிட்டிய, கிராகம ஆகிய பயிற்சிக் கல்லூரிகளுக்கு சிங்கள மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இம்மாணவர்களுக்கான உள்ளக பயிற்சிகள் 2017 செப்டெம்பர் 17ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 2019ம் ஆண்டு செப்டெம்பர் 5ம் திகதி வரையில் இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெறவுள்ளது.
மலையகத்தில் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களே இம்முறை பயிற்சிக் கல்லூரிகளுக்கு அதிகமாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கில் ஆசிரியர் உதவியாளர் இணைத்துக்கொள்ளப்படாமையினால் அம்மாகாண மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாக பிரதம ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பட்டதாரி ஆசியர்கள் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.