இலங்கை மின்சார சபையில் சாதாரண அடிப்படை மற்றும் பயிற்சி அடிப்படையில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் இன்று (15) காலை 08.30 மணிக்கு கட்டாயம் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் என்று மின்சரம் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அவ்வாறு பணிக்கு திரும்பாத சாதாரண அடிப்படைய மற்றும் பயிற்சி அடிப்படையில் இருக்கும் அனைத்து பணியாளர்களும் பணியில் இருந்து விலகியதாக கருதப்படும் என்று மின்சாரம் மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன விடுத்த விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மின்சார சபை பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு குறித்து கருத்து வெளியிட்டிருந்த அவர், மின்சார சேவையை அத்தியாவசிய சேவையாக கருதி, இலங்கை மின்சார சபை முகாமையாளரால் சுற்றரிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அத்தியாவசிய சேவையை தடையின்றி முன்னெடுப்பதற்க்காக இலங்கை மின்சார சபையின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, 2017 செப்டெம்பர் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை பணியாளர்களின் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றரிக்கையின் ஏற்பாடுகளை கருத்திற்கொள்ளாமல் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவார்களானால், அது குறித்து சிந்திக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று (14) பிற்பகல் மேற்படி விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, இலங்கை மின்சார சபையில் சாதாரண அடிப்படை மற்றும் பயிற்சி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.