பாதுகாப்பு, அரச ஆட்சேர்ப்பு விதிமுறைகளுக்கு எதிராக ரயில் இயந்திர சேவை உதவியாளர் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி தொடர் சேவை புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே சாரதிகள் உதவியாளர்கள் பணிக்கு இணைத்து கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டளர்கள் சங்கம் ஆகியன இணைந்து நேற்று இரவு முதல் சேவை புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தன.
இந்த திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகிய நிலையங்களில் இருந்து நேற்று இரவு புறப்படவிருத்த பல ரயில் சேவைகள் ரத்தாகின.
இந்த நிலையில், தமது சேவை புறக்கணிப்பு குறித்து ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கருத்து வெளியிடுகையில்,
ரயில் இயந்திர சேவை உதவியாளர் ஆட்சேர்ப்பானது சாரதிகள் பாதுகாப்பு மற்றும் அரச ஆட்சேர்ப்பு விதிமுறைகளுகக்கு எதிராக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்ததாகவும், அவர்கள் அதனை சரிசெய்வதாகவும் உறுதியளித்திருந்ததாகவும் ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ரயில் இயந்திர உதவியாளர் ஆட்சேர்ப்பு முறைமையில் திருத்தங்களைள மேற்கொள்வதில்லை என கடுமையான நிலைப்பாட்டில் பிரதமரின் ஆலோசகரும், போக்குவரத்து அமைச்சின் செயலாளரும் உள்ளனர்.
இந்த நிலையில், சேவை புறக்கணிப்பில் ஈடுபடுவதைத் தவிர தமக்கு வேறு வழியில்லை என ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.
இதனால், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.