இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் உள்ள வடக்கு தொண்டர் ஆசிரியர்கள் உள ரீதியான அழுத்தங்களுக்குள்ளாகியிருப்பதுடன் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடக்கில் உள்ள அரசாங்க பாடசாலைகளில் சுமார் 686 தொண்டர் ஆசிரியர்கள் பணியாற்றி வந்த நிலையில் அவர்களில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு தட்டக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் நிரந்தர நியமன பெயர் பட்டியலில் தனது பெயர் இல்லாத நிலையில் அண்மையில் கழுத்தில் சுருக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும் நிரந்தர நியமனம் கிடைக்காதவர்கள் மத்தியில் சுமார் 10 வருடங்கள் வரை தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களும் உள்ளனர். இதனால் அவ்வாசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வட மாகாணத்தில் நிரந்தர நியமனம் பெறாத தொண்டர் ஆசிரியர்கள் அண்மையில் ஈ.பி.டி.பி கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். குறித்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாக இதன் போது டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
நிரந்தர நியமனம் கிடைக்காத தொண்டர் ஆசிரியர்களுடைய சான்றிதழ்கள் மற்றும் லொக் புத்தகம் என்பவற்றை மீண்டும் ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் உறுதியளித்துள்ளார்.
எனினும் நிரந்தர நியமனம் கிடைக்காத தொண்டர் ஆசிரியர்களின் மனதைக் குளிர்விப்பதற்காக முதலமைச்சர் இவ்வாறு தெரிவிக்கிறார் என்று தொண்டர் ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களாக அரச பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிய அனைவருக்கும் கல்வியமைச்சு கோரியுள்ள அனைத்து தகமைகளையும் இருந்தபோதிலும் நிரந்தர நியமனம் வழங்கப்படாமை பாரிய அநீதியாகும் என்றும் வட மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் கவலை வௌியிட்டுள்ளது.