வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வடக்கு கிழக்கில் உள்ள 45 தேசிய பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் நோக்கிலேயே அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இவ்வண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அதற்கமைய வடக்கில் 17 தமிழ் மொழிமூல தேசிய பாடசாலைகள், 3 சிங்கள மொழி மூல பாடசாலைகள், கிழக்கில் 24 தமிழ் மொழி மூல பாடசாலைகள் மற்றும் 5 சிங்கள மொழி மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பப்படவுள்ளன.
இவ்வெற்றிடங்களுக்கு இலங்கை கல்வி நிருவாக சேவை, இலங்கை அதிபர் சேவை என்பவற்றை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இலங்கை நிருவாக சேவை தரங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவு செய்யப்படுவோர் நியமனம் பெற்ற பாடசாலைகளில் 3 வருடங்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரிதியில் 354 தேசிய பாடசாலைகளில் இருந்தபோதிலும் அவற்றில் 302 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லையெனவும் அவ்வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களும் தற்போது கோரப்பட்டுள்ளன என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மேற்படி அதிபரில்லா தேசிய பாடசாலைகளில் 74 தமிழ் மொழி மூல பாடசாலைகள் என கணிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 49 பாடசாலைகள் வடக்கு கிழக்கைச் சார்ந்தவை. ஏனைய மாகாணங்களில் உள்ள சுமார் 25 தமிழ் மொழி மூல பாடசாலைகளில் அதிபர்கள் இல்லையெனவும் கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு கிழக்கு தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித்திகதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆகும்.