சமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன் கொண்ட இளைஞர் யுவதிகள் பத்து இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜே. தடல்கம தெரிவத்துள்ளார்.
சமூக வலுவூட்டல் அமைச்சர் பி. ஹரிசனின் ஆலோசனைக்கமைய இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் புத்தாக்க திறன் மிக்க பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலையற்ற இளைஞர் யுவதிகள் இருப்பது கண்டறியப்பட்டது. பாடசாலை கல்வியை இடைநிறுத்திய, பொருளாதார பிரச்சினை காரணமாக கல்வியை இடைநிறுத்திய, பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக தவறான பாதையில் சென்று தொழிலின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளை சரியான பாதையில் வழிநடத்துவதற்கும் இத்திட்டம் பயனளிக்கும்.
தற்போது சம்பிரதாயபூர்வான தொழில் மற்றும் திறமையுடன் கூடிய இளைஞர் யுவதிகள் பற்றாக்குறை காணப்படுகிறது. எனவே அடையாளங்காணப்பட்ட இளைஞர் யுவதிகளை சரியான பாதையில் வழிநடத்தினால் அவர்கள் பயனடைவதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு வழங்குவார்கள்.
தொழிற்கல்வி பயிற்சி மற்றும் அது தொடர்பான விசேட திறமை மிக்க ஆலோசனைகளினூடாக இவ்விளைஞர் யுவதிகளை பயிற்சியளித்து சமூக மயப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இத்திட்டத்திற்கு தொழிற்கல்வி நிலையங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு விடேச தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.