பச்சை தேயிலை ஒரு கிலோ தற்போது 50 ரூபாவிலிருந்து 100 ரூபா வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேயிலையின் விலை உயர்ந்திருக்கும் போது முதலாளிமார்களினால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை ஏன் வழங்க முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் விசேட கூட்டம் நேற்று ஹட்டனில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்
பச்சை தேயிலை ஒரு கிலோ இன்று 50 ரூபாவிலிருந்து 100 ரூபா வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும், டன்சினன் வீடு திறப்பு விழாவின் போது அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இவ்வாறு தேயிலையின் விலை உயர்ந்திருக்கும் போது முதலாளிமார்களினால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை ஏன் வழங்க முடியாது?
நட்டம் என்று சொன்னால் பெருந்தோட்டங்களை விட்டு செல்ல வேண்டியது தானே என கேள்வி எழுப்பிய அமைச்சர் திகாம்பரம், பெருந்தோட்ட கம்பனிகள் இன்றும் இலாபத்தை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
காடாகி இருந்த மலையகத்தை வளமான பூமியாக்கிய தொழிலாளர்களின் உழைப்பினால் தோட்ட நிர்வாகிகள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா வரை சம்பளம் பெறுகின்றனர். தோட்ட உரிமையாளர்களும் கோடி கணக்கில் இலாபம் அடைகின்றனர்.
இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுப்பதற்கு ஏன முடியாது. இம்முறை கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது.
நியாயமான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்து கம்பனிகளுக்கு எதிராக தலவாக்கலையில் எதிர்வரும் 23ம் திகதி போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.