
அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்ட 445 தொண்டராசிரியர்களில் 117 தொண்டராசிரியர்கள் தகுதி இருந்தும் எதுவித நியாயமான காரணங்களுமின்றி நிரந்தர நியமனத்திற்கான பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அநீதி இழைக்கப்பட்ட இந்த தொண்டராசிரியர்கள் விடயத்தில் கவனம் எடுக்குமாறு கிழக்கு மாகாண தமிழர் தொண்டராசிரியர் சங்கத்தின் தலைவர் நா.அன்பழகன் எதிர்க் கட்சித்தலைவர் இரா. சம்பந்தனிடம் கோரியுள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவரிடம் நேற்றைய தினம் அவர் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.
அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘இதுகால வரையில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டும் எதுவிதமான தீர்வும் கிடைக்கவில்லை எனவே தாங்கள் பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்களின் நியாயமான கோரிக்கையை கேட்டு அமைச்சரவையினால் வழங்கப்பட்ட பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனையின் அடிப்படையில் நியாயங்களை பெற்றுத்தர ஆவண செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.’
என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.