பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா அடிப்படை சம்பள உயர்வு கோரி புஸ்ஸலாவ நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
புஸ்ஸலாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் எழுச்சிமிகு இளைஞர் குழு என்ற அமைப்பு, ஆசிரியர்கள், யுவதிகள் எனப் பலரும் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கக்கோரி பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டதுடன் இந்தச் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு தங்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுத் தரவேண்டும் என வலியுறுத்தினர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை பல தடவைகள் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் இடையில் நடைபெற்ற போதிலும் அதில் எவ்வித தீர்மானமும் எடுக்காத காரணத்தால் கடந்த சில வாரக் காலமாக தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.