இன்று சர்வதேச தேயிலைத் தினமாகும். உலகின் பல நாடுகளில் வாழும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஒற்றுமைக் குரலை ஒரே தினத்தில் எழுப்புவதற்காக டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச தேயிலைத் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
உலகில் தண்ணீருக்கு அடுத்த படியாக உலக மக்களால் அதிக அளவில் அருந்தப்படும் பானமாக தேநீர் உள்ளது.
தேயிலையை சர்வ நோய் நிவாரணி பானமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தமையினால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன.
எனவே தேயிலை உற்பத்தியின் தேவை மக்கள்தொகை அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்துச் செல்லவேண்டிய தேவை உள்ளது.
எனவே, தேயிலை உற்பத்திற்கான சூழலைக் கொண்டுள்ள நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
அறுபதுகளுக்கு முன்பதாக சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளே தேயிலையை உற்பத்தி செய்து வந்தன.
ஆனால் இன்று உலகின் 58 நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
தேயிலை உற்பத்தியை மேற்கொண்டு வரும் நாடுகளில் இலங்கை பெரும் பங்களிப்பை செலுத்துவதுடன்,மலையகம் சிறப்பிடத்தை வகிக்கின்றது.
சர்வதேச தேயிலை தொழிலாளர் மாநாடு ஒன்றின் தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேஸிலின் போர்டே அல்க்கிரியில் உலக சமூக மாமன்ற கூடுதல் நிகழ்வு நடந்தது.
இந்த நிகழ்வில் ஆங்கிலேயரின் ஆட்சியில் முதலாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் நடத்திய முதலாவது சம்பளப் போராட்டத்தினை நினைவு கூறும் விதமாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் திகதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு புதுடில்லியில் 2005 டிசம்பர் 15 அன்று நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தோற்றம் பெற்று படிபடியாக வளர்ச்சி கண்டு இன்றுமனிதனின் அன்றாட தேவைகளில் ஒன்றாக தேனீர் காணப்படுகின்றது.
ஆனால் தேயிலை தேசமாக விளங்கும் மலையகத்தில் தொழில் புரியும் தோட்ட தொழிலாளர்களிள் இன்றைய நிலை என்ன?
இலங்கையின் பொருளதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இன்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
சர்வதேச தேயிலை தினமான இன்றும் மலையகத்தில் தோட்ட தொழிலாளர்கள் பல இடங்களில் தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை சம்பளமாக 1000 ரூபா அதிகரிக்க வேண்டும் என கோரி தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
எனினும், 600 ரூபாவுக்கு மேல் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க முடியாது என முதலாளிமார் சம்மளனம் உறுதிபடத் தெரிவித்துள்ளன.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் தொடர்ந்தவண்ணம் உள்ளன. எனினும், ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் குறித்து இறுதி முடிவொன்று எட்டப்படவில்லை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலையானதொரு சம்பள முறைமை இல்லாதமை காரணமாக அவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக சம்பள அதிகரிப்புக்காக அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது.
இந்த நிலைமை மாற்றமடைந்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காலத்திற்கு ஏற்றவாறு அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிட்டால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமது அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கக்கோரி தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி போராடுவது தொடர்கதையாகவே அமையும்.