2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளிலிருந்து ஆசிரியர்கள் விலகும் நிலை உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் கணித பாட விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் குறைக்கப்படுவதே இதற்கான காரணம் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கணித பாட விடைத்தாள் திருத்தப் பணிக்காக கடந்த ஆண்டில் ஒரு விடைத்தாளுக்கு 178 ரூபா வழங்கப்பட்டது. எனினும், அந்த கொடுப்பனவை 149 ரூபாவாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ஜயசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் இந்தக் கொடுப்பனவு போதுமானதல்ல. எனவே, குறித்த கொடுப்பனவை குறைப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கையை மறுபரீசீலனை செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோருவதாகவும் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லாவிட்டால், தற்போது விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியரிகள் அந்தப் பணிகளிலிருந்து விலகுவதற்கு தயாராக உள்ளனர்.
எனவே, குறித்த விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான கொடுப்பனவை திருத்தத்திற்கு உள்ளாக்குமாறு கோருவதாக மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.