வடமாகாணத்தில் கடற்றொழில்துறை சார்ந்த அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பல மீன்பிடி இறங்குதுறைகளும் நங்கூரமிடும் தளங்களும் மேம்படுத்தப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் 1280 கடற்தொழிலாளர் குடும்பங்கள் நன்மையடைவார்கள் என அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இதன்படி தெல்லிப்பளையில் பலாலி வடக்கு இறங்குதுறையும், ஊரணி இறங்குதுறையும், சங்கானை பிரதேச செயலகப்பிரிவில் அராலி இறங்குதுறையும், பருத்தித்துறை பிரதேச செயலகப்பிரிவில் பொலிகண்டி இறங்குதுறையும் 270 மில்லியன் ரூபாவில் மேம்படுத்தப்பட்டு கடற்தொழிலாளர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்படுத்தலின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறையிலும் மன்னார் மாவட்டத்தின் பேசாலையிலும் இரண்டு பாரிய மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கான வடிவமைப்பு வேலைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்டைதீவில் நங்கூரமிடும் தளமும், முனை, ஆதிகோவிலடி, தலைத்துறை, துறையூர், புங்குடுதீவு, அராலித்துறை, சாம்பலோடை, காக்கைதீவு இறங்குதுறைகளும் மன்னார் மாவட்டத்தில் கொண்டைகச்சிகுடா, அரிப்பு, மீனப்பாடு, சிறுதோப்பு, வங்காலை, தலைமன்னார் இறங்குதுறைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் நாச்சிக்குடா, வாழைப்பாடு, பள்ளிகுடா இறங்குதுறைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இரணைபாலை, சிலாவத்துறை, தீர்த்தகரை, களப்பாடு தெற்கு, களப்பாடு வடக்கு, கொக்கிளாய் இறங்குதுறைகளும் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான மொத்த கிரயம் 201 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.