கிளிநொச்சி மாவட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர். எனினும், அவர்கள் தமது உரிமைக்காக குரல்கொடுக்கவும், தொழிற்சங்கங்களில் தம்மை அங்கத்தவர்களாக இணைந்துகொள்ளவும் முடியாத அளவுக்கு நிறுவனங்கள் தடை ஏற்படுத்துவதாக இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் தகவல் வெளிப்படுத்துகிறது.
இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் (CMU) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சி நகரில் கடந்த 10ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தையும், பொதுக்கூட்டத்தையும் நடத்தியது.
கிளிநொச்சி பேருந்து நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சில்வெஸ்ரர் ஜெயகொடி மற்றும் சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளர் எஸ்.பி.நாதன் உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 350 தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்தக் கவனயீர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் என்பனவற்றின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் தொழிலாளர்கள் விசேடமாக பெண் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் வெளிக்கொணரப்பட்டது.
”உழைக்கும் பெண்கள் பாவனைப்பொருள் அல்ல!”, ”எங்களையும் மனிதர்களாக மதித்து நடவுங்கள்!”, ”உழைக்கும் பெண்களை அடிமைகளாக நடத்தாதே!”, ”புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமைகொடு!”, ”அந்நிய செலாவணியில் பெரும் பகுதியை ஈட்டித்தரும் எம்மை அலட்சியம் செய்யாதே!” என்ற 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்திருந்த இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சில்வெஸ்ரர் ஜெயகொடி, ஆண், பெண் என தொழிலாளர்கள் அனைவரும் சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
எனினும், பெண் தொழிலாளர்கள் அதிகளவில் சுரண்டல்களுக்கு உள்ளாகிகன்றனர். வீட்டுப் பணிகள் மற்றும் தொழிலிடத்தில் ஆற்றும் பணிகள் என்பனவற்றில் அவர்கள் அதிகளவில் சுரண்டப்படுவதுடன், துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்த சகோதர, சகோதரிகளுடன் கரம்கோர்த்து அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு வருகை தந்ததாக சில்வெஸ்ரர் ஜெயகொடி தெரிவித்தார்.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில், இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் நாகரெட்ணம் யோகராணி, புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்று முகங்கொடுக்கும் பாதிப்புகள் எதிர்காலத்திலும் தொடரக்கூடாது என வலியுறுத்தினார்.
வடக்கில் நுண்கடன் திட்டங்களினால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியதுடன், இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் எடுத்து இந்த நுண்கடன் திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் யோசனையை இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் நாகரெட்ணம் யோகராணி முன்வைத்தார்.
இதேநேரம், மலையத்தில் தொழிலாளர்கள் கோரும் 1,000 ரூபா அடிப்படை வேதனத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழுநேர தொழிலாளர்களாக இருக்கும் பெண்கள், பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு உரிய வேதனம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு மரியாதையும் வழங்கப்படவேண்டும் என்றும் என்றும் அவர் தெரிவித்தார்
சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளர் எஸ்.பி.நாதன்,
தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் தம்மை அங்கத்தவர்களாக இணைந்துகொள்ளவும் முடியாத அளவுக்கு நிறுவனங்கள் தடை ஏற்படுத்துவதாக தகவல் வெளியிட்டார்.
இதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்களின் உழைப்பு நூதனமான முறையில் சுரண்டப்படுவதுடன், அவர்களின் உரிமை எவ்வாறு மீறப்படுகின்றது என்பது தொடர்பான தகவலை வெளிப்படுத்தினார்.
இலங்கையில் ஆடை ஏற்றுமதித் துறையில் பிரபலமான நிறுவனமொன்றின் நிறுவனமாக கிளிநொச்சி மாவட்டத்தில் செயற்படும் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் அமர்ந்துகொண்டு பணியாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தில் அவர்கள் நின்ற நிலையில் தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
ஆனால், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நிறுவனத்தில் அதே இயந்திரத்தில் தொழிலாளர்கள் அமர்ந்துகொண்டு பணியாற்றுகின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் நிலவும் இந்த நிலைமை குறித்து ஆராயந்து பார்த்தபோது, அந்த இயந்திரத்தை குறித்த நிறுவனத்தினர், தொழிலாளர்கள் நின்றுகொண்டு பணியாற்றும் வகையில் சற்று உயர்த்தி அமைத்துள்ளதாகவும், அதனை சற்று தாழ்த்தினால் தொழிலாளர்கள் அமர்ந்துகொண்டு பணியாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்றும் இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின்; பிரதி பொதுச் செயலாளர் எஸ்.பி.நாதன் தெரிவித்தார்.
நின்றுகொண்டு பணியாற்றினால், ஓடி ஓடி பணியாற்ற முடியும் என நிறுவனத் தரப்பில் கூறப்பட்டதாக தெரிவித்த அவர், தற்போது ஆடி ஆடி வேலை செய்யும் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய பாடல்களை வானொலிகளில் ஒலிபரப்ப, அதனை செவிமடுத்துக்கொண்டு தொழிலாளர்கள் ஆடி ஆடி தொழில்புரியும் திட்டமொன்றை கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் அதிகாலை 4 மணிக்கு வீடுகளிலிருந்து தொழிலுக்காக வெளியேறி, இரவு 7 அல்லது 8 மணியளவில் தமது தொழிலை நிறைவுசெய்து வீடு திரும்பும் நிலைமை உள்ளது.
இவ்வாறாக நாள் முழுவதும் அவர்கள் உழைக்கின்றபோதும், வெறுங்கையுடன் வீடு திரும்பும் நிலைமையையே காணக்கூடியதாக உள்ளது என எஸ்.பி.நாதன் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும்.
தொழிலாளர்கள் அன்றாடம் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எதிர்த்து போராடவும், அவற்றுக்குத் தீர்வு காணவும், நிறுவன கட்டமைப்பு ரீதியாக ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பணியில் இலங்கை வர்த்தக கைத்தொழில் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் முன்னெடுத்து வருவகின்ற நிலையில், எமது சங்கத்தில் தொழிலாளர்கள் இணையும்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட தொழில் வழங்கும் நிறுவனதினரால் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்ற தகவலை வெளியிட்டார்.
எவ்வாறிருப்பினும், பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரகசியமான முறையில் இணைந்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால், அவர்களின் உரிமைகளை போராடி பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு எடுத்துரைத்தார்.
எனவே, தொழிலாளர்கள் தமது சங்கத்தில் இணைந்து, தொழிலாளர்களின் உரிமைகள் மறுகப்படுவதற்கும், தொழில் சுரண்டப்படுவதற்கும் எதிராக போராடி, தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் தொழில்தரும் சூழலை உருவாக்க வழியேற்படுத்துவதற்கு தொழிலாளர்கள் அனைரும் தமது சங்கத்தில் இணைந்து அதனை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தின் இறுதியில் தொழிலாளர் உரிமைக்காக ஒன்றிணைந்து போராடுவோம் என்று உறுதியேற்றனர்.