இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க சேவைகளில் முன்னுரிமை அளிக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
தற்போது சேவையிலுள்ள சிங்கள உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியும் தமிழ் உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழியும் பயிற்றுவிக்கின்றோம்.
அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக கொழும்பிலும் களனியிலும் வீடமைப்புத் தொகுதிகளை அமைத்து வருகின்றோம். இவ்வருடம் அதன் நிர்மாணப்பணிகள் முடிவுக்கு கொண்டு வரப்படும். மொனராகலையிலும் நான்கு மாடி வீடமைப்புத் தொகுதியொன்றை அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக அமைத்து வருகின்றோம்.
நாம் ஓய்வூதியக்காரர்களை கைவிடவில்லை. அவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக 12 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளோம். பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
வழிமூலம்: தினகரன்