ஊழியர் சேமலாப நிதியத்தில் EPF உள்ள நிதியை பல்வேறு தொடர்புகளின் அடிப்படையில் நிறுவனங்களில் முதலீடுகளை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 24 ஆம் திகதி 27ஃ2 நிலையில் கட்டளையின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2,500 மில்லியன் ரூபாய்களாக இருந்த ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதியின் ஊடாக வருடாந்த முதலீட்டு வருமானமாக 300 மில்லியன் ரூபா பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பில் உள்ளது. ஊழியர் சேமலாப நிதிய சபை இலங்கை மத்திய வங்கியின் முழுமையான பொறுப்பின் கீழ் முதலீடுகளை மேற்கொள்கின்றது
திறைசேரியின் முறிகள் மற்றும் விலைக்கொள்வனவுகளை அடிப்படையாக கொண்டு இந்த நிதியத்தின் முதலீடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தற்போது உள்ள முழுமையான தொகையிலிருந்து 9 சதவீதமான அரசாங்கத்திற்கு கடனாக வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 4.5 சதவீதமான பங்குகள் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ஊழியர் சேமலாப நிதியை மீண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தொடர்பில் தொழிற்சங்கத்தினர் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இந்த நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்
இவ்வாறான நிலையில் ஊழியர் சேமலாப நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் ஊடாக நிதி கொள்ளையடிக்கப்படுவதுடன், பாதுகாப்பற்ற தன்மையும் ஏற்படும் என தொழிற்சங்கங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் எந்தவொரு அரசியல் ரீதியான தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது. எனினும் அரசியல் தலையீடுகளின் ஊடாக இந்த நிதியானது கொள்ளையடிக்கபபட்டமை தொடர்பில் வரலாற்றில் சான்றுகள் உள்ளன.
2008, 2012 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் முழுமையான அனுசரணை ஊடாக ஊழியர் சேமலாப நிதி, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு பாரிய நட்டத்தை எதிர்நோக்கியிருந்தது.
தற்போது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் முழுமையான முதலீடுகளை விற்பனை செய்தால் அதில் 16 ஆயிரம் மில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் நிதியத்திற்கு ஏற்படும்.
அத்துடன் நிதியத்தின் சட்டவிதிகளுக்கு அப்பாற்சென்று விலைப்பத்திரப் தற்போது 10,000 மில்லியன் ரூபா அளவில் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 20,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டிருந்தது.
ஊழியர் சேமலாப நிதியத்தில் உரிமையாளர்களான ஊழியர்களின் பணமே இல்லாது செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தற்போது சுதந்திரமாக உள்ளனர் இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்ட பணத்தை மீள அறவிட வேண்டும்.
இவ்வாறான நிலையில் சமகாலத்தில் அது போன்ற ஒரு அபாய நிலைக்கான முன்னெச்சரிக்கையே உள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதியை மீண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அந்த நிதியை ஊழியர்களுக்கு இல்லாது செய்வதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் உண்மையான தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வழிமூலம்: திவயின