அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை செயற்படுத்தாதிருக்க பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது என பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலமாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலமாக நேற்று (10) அறிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கடந்த மே மாதம் 29ம் திகதி வௌியிடப்பட்ட சுற்றுநிரூபம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த நிலையில் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
30 வருடங்கள் பழைமை வாய்ந்த இச்சுற்றுநிரூபத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கு முஸ்லிம் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் முஸ்லிம் பிரதிநிதிகள் இவ்விடயம் தொடர்பில் பிரதமர் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த சுற்றுநிருபம் திருத்தப்படவுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்றுநிரூபமொன்றை வௌியிடுவதா அல்லது உள்ள சுற்றுநிரூபத்தை திருத்தங்களை கொண்டு வருவதா என்பது தொடர்பில் தற்போது அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கமைவாக அரச அலுவலக வளாகத்திற்கு வருகைத் தரும் அரச ஊழியர்களில் பெண்கள் சேலை அல்லது கண்டிய முறை சேலை (ஒசரி) அணியவேண்டும். ஆண்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணியவேண்டும். இந்நிலையில் இச்சுற்றுநிரூபத்திற்கமைய முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா உடையை அணிய முடியாதிருந்தது. இந்நிலையில் குறித்த சுற்றுநிரூபத்தை ரத்து செய்யுமாறு மனித உரிமை ஆணைக்குழு பொது நிர்வாக அமைச்சை கோரியிருந்தது. சிலர் தமது கலாசார உடைகளை அணிந்து செல்லும் நிலையில் அவர்களை சேலை அல்லது கண்டிய முறைச் சேலை அணிய கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் செயலாகும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில் குறித்த சுற்றுநிரூபத்தை மறுசீரமைப்பு செய்யவுள்ளமையினால் அதனை பின்பற்றத் தேவையில்லை என்று பிரதமர் அலுவலகம் ஏலவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.