வட மேல் மாகாண பாடசாலைகளுக்கு ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை, நீதிமன்ற உத்தரவுக்கமைய இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 22ம் திகதி நடத்தப்படவிருந்த போட்டிப்பரீட்சையே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 22ம் திகதி குருணாகலை மலியதேவ வித்தியாலயத்தில் இப்போட்டிப்பரீட்சை நடத்தப்படவிருந்தது. பரீட்சையில் கலந்துகொள்வதற்காக புத்தளம் போன்ற தூர பிரதேசங்களைச் சேர்ந்த பரீட்சார்த்திகளும் வருகைத்தந்திருந்தனர். பரீட்சை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் முன்னறிவித்தல் வழங்கப்பட்டிருக்கவில்லை. பாடசாலை நுழைவாயிலில் மறுஅறிவித்தல் வரை பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
வடமேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை கவனத்திற்கொண்டு டிப்ளோமாதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சை தரமற்றது என்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்த மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார். தொடர்ந்து பரீட்சை வினாத்தாள் ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில் தரமற்றது என்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பரீட்சை பெறுபேறுகள் முற்றாக ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தவிருந்த பரீட்சை அநீதியானது என்று பரீட்சார்த்திகள் உச்சநீதிமன்றில் மனு கையளித்ததையடுத்து போட்டிப்பரீட்சை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
உச்சநிதிமன்ற தடையுத்தரவு முதல்நாள் (21)ம் திகதியே கிடைக்கப்பெற்றமையினால் பரீட்சார்த்திகளுக்கு அறிவிப்பதற்கு கால அவசகாசம் போதாமல் போனதாக தெரிவித்த மாகாண ஆளுநர், முதற்தடவை போட்டிப்பரீட்சை நடத்தப்பட்ட தினத்தை நீதிமன்றத்திற்கு சொல்வதற்கு மகாாண அரச சேவை ஆணைக்குழு செயலாளர் தவறியமையினால் இந்நிலைமை ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலைமை காரணமாக ஆங்கில ஆசிரியர்கள் இன்றியுள்ள வடமேல் மாகாண பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.