கடந்த 2015ம் ஆண்டு தோட்டப் பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 3021 ஆசிரிய உதவியாளர்களை கவனத்திற்கொள்ளாது கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனின் தலையீட்டில் வடக்கு கிழக்கில் 1019 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கியமைக்கு கடுமையான கண்டத்தை தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க கையெழுத்திட்டு வௌியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தோட்டப் பிரதேசங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ள , வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப்பகுதிகளில் இவ்வாறான குறைந்த சம்பளத்துடனான நியமனங்கள் வழங்குவதை ஆரம்பத்திலேயே நாம் எதிர்த்தோம்.
அவ்வாறு நியமனம் வழங்கப்பட்டவர்களின் தகமைகளுக்கமைய ஆசிரியர் சேவையில் நியமனங்களை வழங்குமாறு தான் அழுத்தம் கொடுத்தபோதிலும் அதனை கவனத்திற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள மஹிந்த ஜயசிங்க, கல்வியமைச்சின் முன்பாக நிரந்தர நியமனங்களை ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குமாறு கல்வியமைச்சின் முன்பாக போராட்டமொன்றை நடத்தியும் பலன் கிட்டவில்லை.
குறுகிய அரசியல் நோக்கில் வறுமையில் துன்புறும் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்காக பாடுபடும் இவ்வாசிரிய உதவியாளர்களுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்குமாறும், அதற்கு உரிய நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ளாவிட்டால் அறிவிப்பின்றி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.